உயிரே பிரியாதே


உயிரே பிரியாதே

என் மூச்சே நீதானே
கற்பை சூரையாட
கயவனுக்கு தெரியும்
உன் கற்பை சுமக்க
எனக்கு மட்டுமே முடியும்
தென்றல் வீசும்போது
தீண்டிட வந்தாய்
தேனை பருகும்போது
ஔடதமாய் புகுந்தாய்
பிணிக்குறை தீர்க்க நீ
பிம்பமாய் நின்றாய்
பேரின்ப தருவதற்காய்
மேனியிலே படர்ந்தாய்
பிரியாதே செல்லமே
பித்துப் பிடிக்குது நித்தமே
ஒன்றாய் நாம் வாழ
ஓடி வா ரதியே

தனிமரம்



ஆசைக்கொன்று அஸ்திக்கொன்றென
அடிமனதில் பதியமிட்டு
பூமியில் பிறந்த புத்திரர்களே நாங்கள்
கல்வியை கரிசனையோடு தொடர
கலையுணர்வோடு நிதமும் பயில
அப்பா பட்டப் பாடுகளை
அடுக்கி அடுக்கி இயம்புகிறேன் தேனு

பள்ளிக் காலமும் ஓடியொழிய
துள்ளி திரிந்தோம் துயரம் அகல
தொழிலும் கூடவே தொடர்ந்து வந்து
தும்பிப்பூச்சாய் பறந்ததுவே

வைகறையில் தானெழும்பி
வாசல் பக்கம் நடந்தார் தந்தை
வீட்டுக்குள்ளே வந்த மகான்
நின்று வீரிட்டு கத்தினாரே

அலரல் சத்தம் காதுக்குள் புக
அலட்டி போட்டு எழுந்தோம் உடனே
அமத்துவம் அடைந்தார் அப்பா
தனிமரமாய் நின்றேன் தரிகெட்டு பாப்பா

தமக்கையின் வாழ்வோ
தம்பியின் கையில்
தனியாய் நின்று உழைத்தேன் பையில்
தன்னலம் மறந்து தன்னில்லம் காத்தேன்
தைரிய மகனாய் தரணியில் வாழ்ந்தேன்

மணமகன் ஒருவரை தேடிப் பிடித்து
தமக்கையின் கையில் ஒப்படைத்து
வாழ்க்கையெனும் சோலைக்குள்ளே
வசந்தக்காற்றை வீசச் செய்தேன்

நிலவில் ஓர் நாள்

தூய்மையான இதயங் கொண்டு
வாய்மையான பயணம் சிறந்து
வாழப் பிறந்த வாரிசு வரிசையில்
வழுக்கி விழுந்தனரே பலர்
இன்பமும் துன்பமும் இரண்டர கலந்து
இதமாக மெதுவாய் இதயத்திற்குள் புகுந்து
வாழ்க்கையின் தத்துவம் இயம்ப
வாதையுடன் நாளும் தேய்ந்ததுவே
சீதமான காற்றும் வீச
சில்லரையான வார்த்தைகளும் பேச
அமாவாசை தினத்தன்று
அர்த்தங்கள் பல புகட்டியதே
காதலித்த காதலர் சோடிகள்
களிப்புடன் சென்றனரே திங்களருகில்
ஒளியியை நேசிக்கும் உருவங்களே
ஓர் நாள் தேயும் பருவங்களே
வளரும் போது வாடாத அரும்பாய்
தேயும்போது தெம்புடன் எழுந்தாய்
நிலையற்ற வாழ்வின் நிலையாமையை
நிலவில் ஓர் நாள் கற்றுணர்ந்தேன்
காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

நள்ளிரவு நந்தவனம்



மண்ணுலகிலே இருக்கிறதுவே
வடிவடிவான நந்தவனங்கள்
விண்ணுலகிலே இருப்பதுவோ
வேடிக்கையான நந்தவனம்
பற்பல மலர்களையெல்லாம்
பாரினிலே பார்த்ததுண்டு
பகலிரவாய் ரசித்ததுமுண்டு
எத்தனை முறை ஆசைப்பட்டாலும்
இரவில் மட்டுமே இன்பமுண்டு
இலவசமாய் பார்ப்பதாலன்று

இருபத்தேழு வகையான மலர்களெல்லாம்
இருட்டிலே மின்னுவதுண்டு
இடையிடையே மழைப் பொழிந்தால்
எப்படி ரசிப்பது கன்று
பூந்தோட்டம் காவல் காக்க
பூரிப்போடு வருகின்ற நிலவே
பூரணை தினத்தன்று
பொக்கிசமாய் நிற்பாளன்று
திங்களிலே திங்களுக்கு விடுமுறையுண்டு
திருடப்பார்க்குதே தேவதைகள் புகுந்து
பார்க்க பார்க்க திகட்டாத
பால் வண்ண பாசமலர்களே
படித்தவனும் பாமரனும்
பான்மையுடன் ரசிக்கும்
நந்தவனமே
நீலநிற பின்னனி கொடுத்து
நள்ளிரவில் மலரும் நந்தவனமே
இயற்கை நந்தவனம் தானமைத்து
இரவையும் சீதமாக்கி தந்த நந்தவனமே
எப்போதும் நாங்கள் உனது சொந்தமே

சொன்ன சொல் என்னாச்சி

சொன்ன சொல் என்னாச்சி
சூறாவளியில் உடைந்த வீடாச்சி
மனதார சொன்ன வாசகமோ
மாருதத்திலே உரசி போயாச்சி


ஒற்றையடிப் பாதையில
ஒன்றாய் இரண்டற கலக்கையில
உண்மைய சொல்லி வாராளென்று
ஊதாரியா யானும் உருகினேனே

சித்தத்திற்குள்ளே கலந்த சித்தம்
சிறைப்பட்டு கிடந்ததே நித்தம்
பெண்ணியம் போற்றிய பிதாவுக்கு
சூசகம் செய்த ராட்சசியே

அன்பையே யான் அடைக்களம் செய்தேன்
வம்பையே நீயோ இன்று வாரியணைத்தாய்
பண்பையே பாரிலே போட்டுடைத்த பாவியே
வீண்த்தெம்பை நீ வீட்டிலே விற்றதேனடி

நம்பியதற்கு விதைத்த நாற்றுமேடையா
நாயகனை ஏமாற்றிய நடைபாதையா
தன்னம்பிக்கையோ தனக்கிருக்கு
தலைகீழாக கலாச்சாரம் மாறியிருக்கு

தாலியை கட்டியதும் தாம்பத்தியம்
வேலியை உடைப்பதில் வீரசோழியம்
வேதனையான விண்ணப்பம் இன்று
சோதிடம் சொல்லியே சுட்டதிங்கே

சொன்னதை மறப்பது சுலபம் உனக்கு
எண்ணியதை இழந்தது எனது மக்கு
காலம் சொல்வதோ தெரியாதுனக்கு
கோலமாய் நிற்கையில் புரியுமுனக்கு

தூதுசெல் துணையே


சொல்வதை சொல்லும் சுவர்ணகிளியே
என் சுந்தர வேண்டுகோளை சொல்லிடு கிளியே
தனிமையில் இனிமை எங்கே கிளியே
தத்ரூபமாய் சொல்லிடுவே பைங்கிளியே
காதல் நோய்க்கு மருந்தில்லை கிளியே
உன்  வாசகத்தால் தூய்மையாக்கு கிளியே
பலமடல்களை நித்தம் பறக்கவிட்டபோதும்
காதல்  பச்சைக் கொடி காட்டுதில்லையே
உண்மையை சொல்ல ஊடகமாய் பலயிருக்கு
உள்ள(த்திலுள்ள)தை சொல்லும் திறமை உனக்கிருக்கு
நம்பிக்கையில்லா நயவஞ்சகர்களை நம்ப முடியாதே
காதல் வெற்றிவாகை சூடுவது உன்னால் கிளியே

விளையாடிப் பார்த்தாய் வினையாகிப் போனது


அன்று  காதல் வாசம் வீசி
இதயத்தை ஸ்பரிசம் செய்தாய் நீயே
மனசும் அத்திவாரமிட்டு
அடைக்களம் தந்தது அன்பே
சல்லாபம் கொள்ள ஆசைப்பட்ட நீ
காதல் சங்கமிக்க மறுத்ததேன்
மாமனார் மகளே
காதல் பெயரை சொல்லி
மோதல் செய்தது நீதான் காதலியே
விளையாடிப் பார்க்க நானென்னை
விளையாட்டு பொம்மையா
அறியா எனது தூய மனது
அடிமையாகிப் போனது
உன் வாசகத்திற்கு
வாழ்க்கையில் விளையாடாதே பாவியே- காரணம்
வஞ்சகக்காரியறியா என் மனதே
வாழும்போதே வாழ்த்திவிடுகிறேன்
நீ வளமுடன் வாழ்கவென்று

பாவி மக ஒன் நினப்பு


பாவி மக ஒன் நினப்பு
என்ன பாடாப்படுத்துதடி
வயசுக்கு வந்த புள்ள
வாழத்தண்டு போல வெள்ள
ஆசாபாசம் கூட வந்து
அடிமனத தட்டுனுச்சி

பாசம் செஞ்ச பாவமென்ன
மோசம் செய்ய முந்திருச்சி
அன்பு என்ற வார்த்தைகுள்ள
அரளி விதைய தூவிருச்சி

காதல் என்கிற கானல்நீர
களவு தனமா ஊத்திருச்சி
காதல் செய்ய ஆசப்பட்டு
கால்கடுக்க காக்க வச்சி
கண்ணே ஒன் மனசுகுள்ள
காவி இழுத்து உறிஞ்சிருச்சி

பாசங் காட்டுர ஒன்ன நெதம்
பாக்க நானு ஓடி வந்தேன்
மோசஞ் செய்யும் ராக்காச்சினு
முன்னமே தெரிஞ்சிருந்தா
தல மொழுகி ஒதிங்கிருப்பேன்
தல நிமுந்து வாழ்ந்திருப்பே

அன்புங்கிர பாசங் காட்டி
வம்ப நெதம் வளர்த்தவளே
நம்ப சொந்தோம் அத்துப்போச்சி
நாளு பேருக்கு தெரிஞ்சிப்போச்சி

அவனோட சரி அன்பா வாழு
அன்பு மச்சா சொல்றத கேளு
பாசோம் என்பது ஒனக்கில்ல
பாடாப்படுத்துது ஓன் நெனப்பு புள்ள

தைமகளே வா

பல ஆண்டுகள் வந்து போன
பாசமான தைமகளே வா
மறத்தமிழனின் மான்புகளை
மகிழ்வுடனே எடுத்துரைக்க வா
பழையனவை கழித்து நித்தம்
புதியன புகுத்த புதுத் தெம்புடன் வா
பாரம்பரிய விளையாட்டுதனை
பதுக்கி பேசும் ஜீவனுக்கு
பகுத்தறிவை புகட்டி நீயும்
பாடம்தனை கற்பித்திட வா
கொஞ்ச கொஞ்சமாய் நம்மினத்தை அழிக்கும்
கொடூர  களையை பிடுங்கிட வா
பாலோடு தேன் கலந்து
பச்சரிசியை அதிலே போட்டு
பசப்பு வார்தையை கிள்ளி எரிந்து
இனிப்பெனும் இன்பத்தைத் தந்திட வா
தை பிறந்தால் வழி பிறந்தது அந்தக்காலம்
பேனா மைக் கொண்டு சீரழிப்பது இந்தக்காலம்
தமிழன் என்ற சொல்லுக்கான
தனித்துவத்தை இயம்பிட வா
தரங்கெட்டு செயலைப் புரியும்
குணங்களை நீ நீக்கிட வா
இத்தனையும் செய்ய வா
இன்பக்கடலில் மூழ்கிட வா
தலை நிமிந்து தமிழன் வாழ
தாரக மந்திரமாய் ஒலித்து வா

பொங்கிடு தமிழா



கதிரவனுக்கு நன்றி சொல்ல
களிப்புடன் பொங்கிடு
இனிமையுடன் வாழ்வை தொடர
இன்முகத்துடன் பொங்கிடு
பழையன பதுங்கி இருக்க
பாசத்துடன் பொங்கிடு
தமிழ் மொழியாம் செம்மொழி
தலை நிமிர்த்த பொங்கிடு
உண்டி தந்த உழவர் குழாம்
உவகை அடைந்திட பொங்கிடு
புதுப்பானையில் அரிசி இட்டு
சக்கரையும் அளவாய் போட்டு
அக்கறையுடன் அக்கினி மூட்டு
அதிலே நம்மினத்தின் சிறப்பைக் காட்டு
நன்றி கெட்ட மனிதன் அறியா
நல்வினையை எடுத்துக்காட்டு
அகல் விளக்கை ஏற்றி இங்கே
ஆத்திரத்தை விரட்டியடி
ஆண்டுதோறும் பொங்கிடும் நீயோ
அகதிகளற்ற தேசத்தில் பொங்கிடு
பொங்கிடு தமிழா பொங்கிடு
பூர்வீகம் பூரிப்படைய பொங்கிடு
மறவாமல் பொங்கிடு மாதாவே
மங்களம் முழங்க பொங்கிடு
உரிமையை பெற்றெடுக்க
உடனே பொங்கிடு
உத்தமனாய் உலகில் மிளிர
ஒய்யாரமாய் பொங்கிடு

கண்களில் என்ன காயமோ

இம்மையிலே மனிதநேயம் எங்கிருக்கு
தூய்மையான இதயத்திலே குடியிருக்கு
ஒன்றுமறியா சீவனோடு ஒட்டியிருக்கு
உதவும்போது ஊருக்குள்ளே பரவியிருக்கு
பிஞ்சுயுள்ளத்திலே நஞ்சை விதைத்தவர் யாரோ
பஞ்சு போன்ற பெதும்பைக்கு பாசந்தருவாரோ
வஞ்சியவள் கெஞ்சு கேட்கும் வரமும் கிடைக்காதோ
தேய்ந்துபோன செருப்பை தரும் தங்கமகன் யாரோ
பூமாதேவி சினங்கொண்டு பொங்கியெழுந்தாளோ
வெம்மையின் விளையாட்டால் விம்மி விம்மி அழுகிறாளோ
பாசமெனும் வேசம் காட்டும் இப்பாரினிலே
நேசமெனும் நெஞ்சம் கொண்ட தயாள மனிதன் தானோ
பெற்றோர் யாரென பேட்டி காணும் முன்னே
மற்றவர்களின் மனிதம் மன்டியிடுகிறதிங்கே
கற்றாரின் கால்களென்ன இரும்பா
கடிவாளம் பூட்டிய குதிரையா
வாழும்போது வாழ்த்த வேண்டிய மனிதா
வஞ்சனை செய்வதே உனதியல்பா
நல்வழி காட்டியவள் நமதவ்வை
அவ்வழி செல்வதே அனைவரினதும் வேலை

பூக்கள் விடும் தூது

 மேகத்தை தூது விட்டேன்
மெத்தையாய் படுத்துறங்க
பறவையை தூது விட்டேன்
உறவை நிதம் நீடித்திட
சந்தனத்தை தூது விட்டேன்
மேனிதனை குளிர்விக்க
எத்தனை எத்தனையோ தூதுவிட்டேன்
இன்பம் காண முடியலையே
வாசம் கொண்ட மலர்களையெல்லாம்
வண்ண வண்ணமாய் தூதுவிட்டேன்
மல்லிகை பூ சொன்னதுவே
கார்குழலின் நறுமணத்தை
வாடா மல்லி இயம்பியதே
வாடா மலரின் வதனம்தனை
கனகாம்பரம் செப்பியதே
கல்யாணம் செய்ய பொருத்தமானவளென்று
அல்லி மலர் கூறியதே
அயராது விழித்து வேலை செய்வாளென்று
தாமரை பூவும் சொன்னதுவே
தானாகவே காலையிலே விழிப்பாளென்று
சூரியகாந்திப்பூ சொன்னதுவே
தூய மனம் உடையவளென்று
காதல் ரோஜாவை தூதுவிட்டேன்
கணப்போழுதில் தாலியை கட்டென்றதுவே

கிராமத்து குளியல்


தாத்தா பிறந்த தங்க ஊரிலே
உயிர் நீத்தார் ஒன்றுமறியா பருவத்திலே
ஏழுநாள் வழிபாடு முடிந்ததுமே
களிப்பாய் குளித்தோம் பொய்கையிலே
மனதும் சோகத்தில் மூழ்க
மனதார குளிர்ச்சி பெற்றதுவே
கண்ட துன்பங்களும் கரைந்ததுவே
கானல்நீராய் பறந்ததுவே

அழியாத சுவடுகள்


அழியாத சுவடுகள்
அரங்கேற்றிய நாடகங்கள்
அன்பெனும் பாத்திரம் ஏற்று
அகத்தை வடுவாக்கிய கீற்று
கண்கண்ட தெய்வத்தை
கண்கலங்க வைத்த காரிகை
கலிகால உலகத்திலே
உளியால் தோன்றிய
அழியாத சுவடிவளே

மார்கழி திங்கள் அல்லவோ


ஈரொன்பது ஆண்டுகளுக்கு முன்பு
எங்களுக்கு இருந்தது தெம்பு
வைகறையில் தானெழும்பி
ஆசாரி மலையிலே நீராடி
அடியவர்கள் எல்லோரும்
பஜனை இசைத்த திங்களது


இராமர் பஜனை நாம் பாட
மாந்தர் மனதில் அலாரம் ஊத
சங்கு சேகண்டி சத்தித்திலே
சகலரும் விழித்து எழும்பினரே

ஆளுக்கொரு நாள் சொல்லி
அற்புதமாய் தேநீர் கலந்து
அனைத்து பஜனை சிறார்களுக்கும்
அன்பாய் பகிர்ந்த அழகிய மார்கழி

நல்வழியை காட்டியவர்கள்
நம்ம ஊரு பெரியவர்கள்
நாளும் கடைப்பிடிக்கிறார்கள்
நல்லமதி கொண்டோர்கள்

சீதம் என்பது என்னவென்று
சிறு வயதில் தெரியாதன்று
மார்கழி மாதம் என்றதுமே
மாயவன் நினைவே வந்ததன்று

கடவுள் மாதம் என்று சொல்லி
கருத்துரைத்த காலம் மாறி
கல்விச்சாலை மூடியதால்
விடியும்வரை துயிலும் காலமிது

அன்பின் அடையாளம்

அம்மா எனும் அமிர்தமே
அகிலத்தின் முதல் சிகரமே
அன்பின் அழகிய வடிவமே
அடியேனை ஈன்ற தெய்வமே
உதிரத்தை மாற்றிய உருவமே
உறவின் உன்னத தோற்றமே
தொப்புள் கொடியின் தொடக்கமே
தொய்வில்லா தொடரும் கூட்டமே
உண்டியின் சுவையான திலகமே
உமிழ்நீரும் ஊறுது நாளுமே
அன்றில் பறவையின் அடையாளமே
அரவணைப்பின் அழகு அத்திவாரமே
இத்தனை காலம் கடந்துமே
இடுப்பில் சுமந்த இதயமே
மனதில் சுமந்த மாணிக்கமே
மாதாவே எனது சொர்க்கமே
காலங்களை வென்ற கற்பகமே
சோகங்களை விரட்டிய சுந்தரமே
ஆண்டுதோறும் மலரும் அன்னையர் தினமே
தாய்ப்பாலை நினைவூட்டுது தங்கரதமே
ஓராண்டு உதயமாகும் இத்தினமே
ஒவ்வொரு நாளும் மலர்ந்தால் சுகமே
தேனாய் தித்திக்கும் திங்களே
கரும்பாய் இனித்திடும் பொங்கலே
வாழ்க வாழ்க பல்லாண்டு தாயே
வாழ்த்துகின்றேன் உங்கள் கற்கண்டு சேயே

கிணற்றுத்தவளை

கிணற்றுத்தவளையாய் கிடைத்த கீதாஞ்சலியே 
கிறுக்ககூட தெரியாத கிறுக்கியே 
பூச்சியம் போட தெரியாத ராட்சசியே 
ராட்சியம் ஆள முடியுமா சூசகமாய் 
ஒன்றும் அறியாத உத்தமி நீ 
என்றும் திருந்தாத இளையவள் நீ 
கற்க விடயங்கள் எவ்வளவோ இருக்கு 
கசடராய் கலாய்ப்பது உனதுபோக்கு 
காலம் பதில்சொல்லும் காதலியே சதியே

அணையாத நெருப்பு

அன்பை அள்ளித் தெளித்தேன்
அனல் பிழம்பில் குளித்தேன்
தீயெண்ணத்தை தினமும் ஒழித்தேன்
நிதமும் உணவளிப்பது நித்தியவேலை
அநீதியை அழிப்பது மற்றொரு வேலை
அதர்மம் அகழும்வரை
காப்பது அனலின் சேவை
தர்மம் தலைத்தோங்கும் வரை
தானும் அணையா தீப்பொறியே

மகள்

மழலையான மாணிக்கமே
மார்பில் தவழும் தங்கரதமே
பாசத்தின் பாயாசமே-நீங்கா
நேசத்தின் நெல்லிக்கனியே

அப்பா அப்பா என்றழைக்கும்போது
ஆகுலமெல்லாம் பறந்தோடுமே
செல்லத்தின் சீதனமே
திகட்டாத செங்கரும்பே
அழகு வடிவான சித்திரமே
அப்பாவின் அழகு முத்துரதமே
இன்னொரு நண்பனெனும் தங்கையே
இனிய சுவையான தேனமுதே
குசும்பு செய்வதில் குஞ்சரதமே
விரும்பி சுவைக்கும் வெள்ளிரதமே
அறிவாய் பேசும் அண்ணக்கிளியே
அனைவரையும் கவர்ந்த வண்ணக்கிளியே
சிரிக்கும்போது மலரும் செந்தாமரையே
சிந்தித்து பேசும் என் செல்லரதமே
பள்ளிச் செல்லும் செல்லக்குட்டியே
துள்ளிக் குதிக்கும் கன்றுகுட்டியே
பசியை தாங்காத பாசமலரே
ருசிக்க கேட்பாய் பனிக்குழைவே
வருத்தம் வந்தாலும் அப்பா
வைத்தியரிடம் சென்றாலும் அப்பா
உல்லாசம் செல்லவும் அப்பா
உதட்டை கடிக்கவும் அப்பா
நன்னடத்தை தான்கற்று நீ
நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன்

உன் நினைப்பில் பூ தொடுத்தேன்



உன் நினைப்பில் பூ தொடுத்தேன்

உயிரையே அதில் ஈடு வைத்தேன்
அழகு மலர்களை கையில் எடுத்து
அன்புத் தேனை நாளும் குடித்து
காதலிக்க நினைத்தபோது
கண்ணொளியில் சிக்கியதே

வாசம் வீசும் வண்ண மலர்கள்
நேசம் கொண்ட நீண்டச்சரமாய்
பாசமெனும் உன் நினைப்பை
பக்கத்திலே வந்து சுமந்ததடி

நினைவுகளோ தொடர் கதையாய்
நீண்ட கதை சொல்கிறதே
கண்ட நாளை மறக்கவில்லை
காவியமும் படைக்கவில்லை
உள்ளம் என்ற சுவடினிலே
உன்நாமம் ஒலிக்கிறதே

ஒன்றாய் கூடிய மலர்களெல்லாம்
உன் மனசை உடனே கவர்ந்திடவே
அத்தான் நினைப்பில் பூத்தொடுத்த
ஆயுள் வரை உன்னை மறவேனடி

அவள் என் அகராதி



அகர வரிசையின் முதலெழுத்து

அன்புச்சரம் நீதானே

காதல் எனும் கடலினிலே
கலைச்சொல்லும் நீதானே
ஓராயிரம் வார்த்தைகுள்ளே
உன்னையே தேர்ந்தெடுத்தேன்
பல அர்த்தம் புகுட்ட வைத்த
பத்தினியும் நீதானே
இலக்கணத்தில் எழுத்துப்பிழை
எத்தனையோ
கண்டதுண்டு
என்னவளின் புத்தகத்திலே
அத்தனையும் நிறைகுடமாயுண்டு
அவயங்கள் ஒவ்வொன்றும்
அர்த்தம் ஒலிக்கும் மங்களமாய்
மொத்தமாய் வந்துதித்த
முதல் அகராதி நீதானே

முயற்சியே திருவினையாகிறது



வறுமை குடும்பத்தில்
பிறந்தவனே
வாழ்வில்
வாகை சூடுகிறான்
உடலை வளர்க்க
உணவை சுருக்கி
உபவாசம் செய்பனும்
ஒல்லியாகிறான்

இன்று இளமை உணவு
உண்ணும் தனவந்தன் எல்லாம்
அன்று ஒரு பிடி சோற்றுக்கு
தவமிருந்தவர்கள்தான்
முயற்சி எனும் தாரக மந்திரத்தை
முழு நேரமும் ஓதியவர்கள்தான்
உலக சாதனையில்
கீர்த்தி பெற்றோரெல்லாம்
விடாமுயற்சியின் விதைகள்தான்

வாழ்க்கைத்துணையின்
நெறியாள்கையோடு நீந்தியவரெல்லாம்
கலங்கரைவிளக்கங்களாய்
கரையை கண்டவர்கள்தான்
முயற்சி என்ற பயிற்சியை
மூவேளையும் தான் ஜெபித்து
முக்தி பெற்ற புரோகிதர் தான்

கவிஞனென்ற அடையாளத்தை
பெற காத்திருந்த நாணலே நான்
பாவலர்களின் கணிப்பிலே
பட்டைத் தீட்டப்பட்டவனும் யானே

தோல்விகள் பல கண்டு
துவன்று விடவில்லையே
வெற்றி கனி சுவைத்திடவே
முயற்சி மரம் ஏறிவந்தேன்

இயற்கை என்னும் இளைய கன்னி


இயற்கை என்னும் இளைய கன்னி
மசக்கையினால் மாம்பழம் கிள்ளி
எழில் கொஞ்சும் இத்தரணியிலே
நிடலம் வளைத்த வானவில்லோ
விசும்புதனை கட்டியணைத்து
குசும்பு செய்யும் கோமகளோ

நட்சத்திரம் வானில் மின்ன
நடுநிசியில் ஊருறங்க
நிசப்த வேளையில்
காதல்உலாவும்
நிலாமகள் நீதானே
அழகு மகள் தேர்போல
அரவணைக்கும் தாய்ப்போல
திங்களெனும் பெயரில் வந்த
தங்கப்பாவை நீதானே
காற்றை நீயோ காதலித்து
ஆரணிய தேவதைகளை
கட்டிப்பிடித்து சல்லாபிக்கும்
தென்றலும் நீதானே
பயணம் பல செல்லும் போது
பாவை உன்னை நான் மறவேன்
அம்மா என்ற உயிரைக்கூட
சும்மா தந்தவள் நீதானே
செயற்கை என்னும் நவீன மங்கை
இயற்கையின்றி வாழ்ந்திடுமோ

அக்கா


இன்னொரு அம்மா என்னக்கா
இன்ப துன்பத்தை பகிர்ந்து
என் இதயத்திற்குள் புகுந்து
இன்னிசை பாடும் தேவதை
என்னக்கா

குழப்படி செய்தால்
வழக்கப்படி வந்து
தடியடி கொடுத்து தடயம்
பதித்தவள் என்னக்கா
வறுமை வந்து வாட்டியபோது
பொறுமையாய் பசி தீர்க்க
தானுன்பதை விடுத்து
தம்பிக்கு கொடுங்கம்மாளென
தாட்சணியம் காட்டியவள்
என்னக்கா
வாழ்வில் திருமணம் எனும்
நறுமணம் வீச
தினமும் சிந்தனை
இளையவன் பக்கம் திரும்ப
இசைவாக்கமாய்
இயங்கியவளே என்னக்கா
ஆதரவு அன்பும் அவளது
இரு கரங்கள்
அரவணைப்புக்கு இவளே ஆதாரம்
தம்பி தம்பி என உச்சரிப்பதே
தாயவளின் தாரகமந்திரம்
ஆசைக்கொன்று அஸ்திக்கொன்று
அக்காளே அன்புப் பூக்கன்று
அடிக்கடி விடும் மூச்சுகாற்று
அவளது சுவாசக்காற்று
பல்லாண்டு நீ வாழ்க தாயே
பாசத்துடன் வாழ்த்துவது
உன் அன்பு சேயே

துன்பத்தில் தோள் கொடுப்பது மனைவி



பார்க்காமல் வந்த பார்வதியே
பாவங்களை நீக்கும் புண்ணியநதியே
உண்மையின் அடையாளமான உத்தமியே
ஊரே போற்றும் சித்திரமே
பிணியென்று எனக்கு வந்துவிட்டால்
பிசினைப் போல ஒட்டிக் கொள்வாளே
அருகினிலே தானிருந்து நித்தம்
ஔடதமாய் கலந்து ஆதரிப்பவளே
கண்ட நாள் முதல் கொண்டு
கண்ணிமைக்குள் வைத்து காப்பவளே
துன்பம் என்ற வாசகத்தை
தூக்கி தொலைவில் வீசியவளே
நல்குரவு என்ற நாற்றுதனை
நாட்ட நாட்டம் நாடாதவளே
அன்பு எனும் அகல்விளக்கேற்றி
அடியோடு இருட்டை நீக்கியவளே
வாழ்க்கை எனும் போருக்குள்ளே
வாகைச் சூட வந்தவளே
மனசு என்ற மாளிகைக்குள்
மங்காமல் வைத்து காப்பாளே