கொழுந்தெடுக்கும் கோதையரே


கொடுத்தெடுக்கும் கோதையரே

கொங்காணியிலே என்ன இருக்கு
அந்த கால கனவெல்லாம் கணக்கு
அருகம்புல்லா தூங்கிக்கிடக்கு

சாதனைகள் பல செய்து
சாதிக்க மனசு துடிக்கையில
கூலிகாக்கார கூட்டமென்று
கொடுமை செய்ய பார்க்குறீயே

பீதியென்பது எங்களுக்கில்ல
பிரம்மனிடமோ நீயும் கேட்டதில்ல
ஊக்கத்தோடு வென்றெடுக்கும்
உழைப்பாளி சிங்கங்கள்டா நாங்க

பாம்பும் சிறுத்தையும் கூடவே வந்து
பாட்டாளி வர்க்கமுனு அழிக்க பார்க்கும்
பயந்து நாங்க ஓட மாட்டோம்
நாடே உயர நாங்க உழைப்போம்

நீயும் நானும் ஒன்னா சேர்ந்து
நிம்மதிக்காய் சுதந்திரம் கண்டோம்
தனக்கு மட்டும் உரியதென்று
தம்பட்டமடிக்கும் சாதியடா நீ

உலக நாட்டு வரிசையிலே
ஒன்றாம் இடத்தில எங்க உழைப்பு
உழைப்பெல்லாம் சுரண்டிகிட்டு
ஊதாரியாக்குவதே உங்க நெனப்பு

இனியும் பொறும எங்களுக்கில்ல
துளியும் கூட அஞ்சுவதில்ல
கழனியில விளையும் நெல்லுபோல
கல்வியில உயர்ந்து காட்டுறோம் பாரு

எரிந்தது நூலகமா? இல்லை தாயகம்!


அன்பும் அறிவும் இரண்டறக் கலந்து/
அன்றையத் தமிழனின் மனதினில் பதிந்து/
உருவாகிய அழகிய அறிவுக் கோட்டை/
எருவாகிப் போனதால் வீழ்ந்ததே வேட்கை/


பனுவல்கள் நாளும் பற்பல சேமித்து/
பாசத்துடன் அனைவரையும் ஒன்றாய் கோர்த்து/
தமிழனின் வரலாற்றை தரணியில் நிலைநாட்ட/
தாற்பரியமாய் எழுந்த தங்க மாளிகையிது/

கண்கள் இரண்டும் குருடாகிப் போனால்/
காட்சிகளை காண முடியுமா எமக்கு/
அறிவுக்கண்னை தீயிட்டு அழிக்க நினைத்தால்/
ஞானக்கண் மீண்டெழுமே தெரியாத உனக்கு/

வீரத்தமிழனின் பான்மையை விளங்காத மானிடா/
தீரயோசித்து தீர்மானிக்காத கயவனடா நீ/
புத்தங்கங்களைத் தானெரித்து பித்தனே மகிழ்ந்தாயடா/
மொத்தமான தாயகத்தின் சித்தமெல்லாம் கலங்குதடா/

நாமெல்லாம் தாயகத்தில் ஒரு இனமடா/
நமக்கென்று ஒரு குணமுண்டு புரியாதா/
அரக்ககுணத்தை நீ எரித்துப் போட்டு/
அறிவுக் கண்ணை திறக்க விடு/

வாசகசாலையில் பிறந்த வண்ணச் சிசுக்களை/
வஞ்சக எண்ணத்தால் நசுக்கினாயே பாவி/
தழிழனின் தார்மீக சொத்துடா அது/
தரணியெங்கும் பறைசாற்றும் தமுக்கமடா இது/

நாம் வாழ்ந்த வரலாறுதான் நூலகம்/
நாசமாகிப் போனதே எங்கள் தாயகம்/
எதிர்காலம் நாளை தமிழின் வாசகம்/
இடிக்க முடியாத அழகிய கோபுரம்/

வருங்கால ஆட்சியினை வசமாக்குவான் தமிழனென்று/
ராத்திரி வேளையிலே ரணகளமாகியது தாயகமே/