சோலைக்குயிலே மாலையிடவா

சோலைக்குயிலே மாலையிடவா
மாலைவெயிலே மயங்கிடவா
அந்திமாலை நேரத்திலே
சந்திவெளி நடப்பவளே
உந்தனது இடையினிலே
குடம் ஊஞ்சலுந்தான் ஆடுதடி


உன்மேல பாசமெனக்கு
உடம்பெல்லாம் ஒட்டிக்கிடக்கு
நெத்தியில பொட்டு வைக்க
நேரங் குறிப்போம் வாவேடி பொன்னு

வைகாசி மாச திங்களிலே
மையல் பேசும் உன் விழியும்
காந்தமா மெதுவா இழுக்குதடி
கழுத்த நீட்ட வந்திடுடி

சொந்தம் பந்தம் ஒன்னா கூடி
சொகுசா வண்டியிலே ஆடிப்பாடி
பொன்னும் பார்க்க வாறோம் புள்ள
பொறுமையா நீயும் வந்திடு மெல்ல

அந்தநேரம் எல்லாம் கூடி
அம்சமா பேசி மகிழ்ந்திடவே
மாலைப்பொழுது வேளையிலே
மாலையிட நானும் வாறேன்

சோளக்காட்டு பக்கத்திலே
சோலியோட வெட்கத்திலே
வெட்கத்தோட நீயிருக்க
முக்காடு போட நானும் வாறேன்

சோலையிலே தனியா இருந்தா
பாலைவனமா மாறும் மனசு
மூனுமுடிச்சி போட்டாதானே
முடங்கி கிடக்கும் இளவயசு

மாலையிட நான் வரவா
காலையிலே தேன் தரவா
பானையிலே மிதக்கும் பதனிப்போல
பொங்குதடி என் மனசு

அட்சயபாத்திரம்

ஆசைகள் பல மனதில் நினைந்து
ஐயிரண்டு திங்கள் என்னை சுமந்து
கனவுகளில் கண்ட சிறு விம்பமே
கனகராஜா எனும் ஒரு கும்பமே

கிருஷ்ணனின் கிருபை நுதலில் பட்டு
கிருஷ்ணலீலா பிறந்தாளே முதல் சிட்டு
தங்கத்தில் உயர்ந்த  தங்க அம்மாவே
தவமிருந்து பெற்ற தங்கராஜா யான்தானே

இம்மையின் அழகை காணும் முன்னே
கருவறை வாழ்வை காட்டியவளே அம்மா
கலை ஆன்மீகம் கல்வி கவியென
எல்லாம் புகட்டிட என்னதவம் செய்தீரோ

சித்தமெல்லாம் முத்தமிட்டு பெற்றிடவே என்னை
சத்தமெல்லாம் இதயத்திற்கு  தந்தவளே அன்னை
பிறந்தபோது நானும் பேரின்பம் கொண்டாயே
கனகம் எனும் அர்த்தம் கோர்த்து
(கனக)ராஜாவென அழைத்து ரசித்தாயே

அன்பின் இலக்கணமான அட்சயபாத்திரமே
அப்பாவின் வழி நடத்திய இரத்தினமே
முத்தமிழ் வடிவத்தின் முதல் அகரமே
ஆலாபனம் பாடி மகிழ்வோம் இத்தினமே

#ஞாலமே #எதற்காக #நீ


ஈசன் பார்வதியின் அருள் பெற்று
இனிதே மலர்ந்த பெரும் உலகே
இன்னுமேன் வாழுகின்றாய்
இக்கட்டான நிலைதனிலே


ஆலயங்கள் அமைத்து அனைவரையும் அழைத்து
அமைதியை நாடிய மனங்களை எல்லாம்
சிதறிய துண்டுகளாய் சிதைத்தது ஏனன்று

ஒன்றும் அறியாத பாலகன் கூட
ஓடி ஆடி ஒன்றாய் செபிக்க
தேடி வந்த யமனை நீயும்
தெருவில் நிறுத்த மறுத்த தேனோ

பொறுமையிலே எண்மடங்கென
புலவர்களும் பாடியதுண்டு
புத்தம் புதிய நாள்தனிலே
குப்தனுக்கு நீயும் பயந்ததேனன்று

இனியும் எதற்காய் நீயும் இருக்காய்
எல்லோர் அகத்திலும் விடத்தை விதைத்தாய்
நல்லதை செய்திட நாட்கள் வேண்டுமா
உள்ளதை தேற்றிட வாழ்வும் மிளிருமா?

நாத்து நடப் போற மச்சான்


நாத்து நட போற மச்சான்
நாலு நாலா காணோம் மச்சான்
மூத்த பொண்ணு கல்யாணத்துக்கு
சேத்த பணம் அரிது தானே

ஆயிரக் கணக்குல செலவு செஞ்சி
அடுத்த வீட்டுல கடன வாங்கி
வேலையால விதைக்க வச்சி
வேர்வ சிந்த உழச்சோம் நாமே

சீதனும் கூட கேக்குறாங்க
சிக்கல மெதுவா கூட்டுராங்க
வயசு வந்த புள்ள நால
வரம்புக் கட்டவும் வேணுந்தானே

மழையும் நல்லா பொழிய வேணும்
மனசும் கூடவே குளிர வேணும்
கல்யாண நாளா எண்ணி எண்ணி
கணக்கு நாமும் போட வேணும்

பங்குனி மாச தேதி பாத்து
பாட்டாளிக்கெல்லாம் சொல்லிப் போட்டு
மாங்கல்யத்த மாப்ள கட்ட வேணும்
மகிழ்ச்சியில நாமும் மூழ்க வேணும்

ஆண்டவன் கண்ண தெறந்து பார்த்து
அருள்மழைய பொழிஞ்சாருன்னா
அறுவடையும் பெருகி போகும்
அத்தன பேருக்கும் வயிறும் நிறையும்

பரிசம் போட வருவதற்கு
பல மாசம் காத்துக்கிடக்கு
நாத்து நட்டு வெளச்சல் வந்தா
நாடறிய தேவய செய்வோம் மச்சான்

உயிர்த்த ஞாயிறு

கருணையும் அன்பையும்
கல்லறையில் சுமந்து/
கர்த்தரின் நாமத்தை
எந்நேரமும் நினைந்து/
சமாதானம் தேடி
வந்த சகோதரத்துவமே/
எதிப்பார்ப்போ இயமன்
அவதாரம் எடுத்து/
இத்தனை உயிர்களையும்
காவுக் கொண்டதேனோ/

ஐக்கூ

எரியும்  மெழுகுதிரிகள்
வெளிச்சத்திற்கு வருகின்றன/
காதல் தியாகங்கள்.