முதல் கவிதை

அன்பென்ற கடலில் விளைந்த முத்தே
அப்பா செதுக்கிய அழகிய சொத்தே
வயதோ உங்களுக்கு மூவைந்து
வைரமாய் மிளிரும் இளங்கன்று
மூன்று வயதில் முதுகில் சுமந்தே
மூவேளையும் உனையே நினைந்தேன்
ஆலைக்கு நானும் செல்கையிலே
ஆளுக்கு முதல் கிளம்புவீரே
கால்களை பிடித்துக் கொண்டு
கரைச்சலும் அன்று செய்தீரே
வளர்ந்து வாலிபனாக திகழ்ந்தாலும்
வாரியணைத்து கொஞ்சுவேன் செல்லமே
அனைவரின் மனிதிலும் இடம்பிடித்து
அப்பம்மாவின் இதயத்திலே குடிபுகுந்து
அருமந்தபிள்ளையான அபிக்குட்டியே
அன்பு உறவுகளது செல்லக்குட்டியே
சிகரந்தனை தான் தொட்டிடவே
தியாகம் செய்யும் தந்தையானேனே
கல்வியெனும் அழகைக்காண
காசினியிலே பல இருக்கார்
கரிசனையோடு கற்று தேர்ந்தால்
காலமெல்லாம் பான்மை மகனே
வாழ்க வாழ்க எந்தன் செல்லக்குட்டி
வாழ்த்துகின்றேன் கைகளைத் தட்டி
அகவைத் தின நாளின்றையா
அகமகிழ்ந்த ஆலாபனங்களை

தமிழுக்குத் தாலாட்டு


அகரத்தில் மலர்ந்த அன்னைத் தமிழே
ஆதியில் தோன்றிய வண்ணத் தமிழே
அகிலம் போற்றும் அழகுத் தமிழே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

முத்தமிழின் வித்தகமே
முவுலகின் மூத்தவளே
சித்தமெல்லாம் ஒளிபரப்பி
சிகரந் தொட்டு வாழ்ந்திடம்மா
இரத்தத்திலே நீ கலந்து
எண்ணத்திலே கருவுற்று
கவிதையாக பிறந்து வந்த
என் திரவியமே கண்ணுறங்கு
ஓராட்டு பாடியிங்கே
உன்னை வெல்ல நானிருக்கேன்
தாலாட்டு கேட்டு நீயும்
தரணியெங்கும் முழங்கிடம்மா
தீந்தமிழாய் இனிப்பவளே
திக்கெங்கும் ஒலிப்பவளே
தேசமெல்லாம் சுற்றி வந்து
திவ்விய நாதம் பாடிடுக் கண்ணே

முள்ளிவாய்க்கால் சரீரம்

அகரத்தின் சிகரமான அடையாள நகரமே/
ஆகுலத்தில் கலங்கிய குருதிப் பிரவாகமே/
மறத்தமிழன் வாழ்ந்த மாண்பான இடமே/
மக்கிப்போன எருவில் கக்கிய தடமே/

ஆணவத்தின் பிடியில் சிக்கிய மனமே/
ஆண்டவனும் கண்ணை மூடியக் கணமே/
நாடாள ஆசைப்பட்ட நாயக்க கூட்டமே/
நம்மினத்தை அழித்த சுவடும் இதுவே/

அழிந்துவிட நாங்களென்ன அரைவட்ட நீர்க்குமிழியா/
ஆவேசமாய் எழுந்திடும் அருகம்புல்லடா நாம்/
உடலமெல்லாம் உக்கி உரமாகிப் போனாலும்/
ஒருநாள் எழுவோம் உலகை ஆள/


காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

கொழுந்தெடுக்கும் கோதையரே


கொடுத்தெடுக்கும் கோதையரே

கொங்காணியிலே என்ன இருக்கு
அந்த கால கனவெல்லாம் கணக்கு
அருகம்புல்லா தூங்கிக்கிடக்கு

சாதனைகள் பல செய்து
சாதிக்க மனசு துடிக்கையில
கூலிகாக்கார கூட்டமென்று
கொடுமை செய்ய பார்க்குறீயே

பீதியென்பது எங்களுக்கில்ல
பிரம்மனிடமோ நீயும் கேட்டதில்ல
ஊக்கத்தோடு வென்றெடுக்கும்
உழைப்பாளி சிங்கங்கள்டா நாங்க

பாம்பும் சிறுத்தையும் கூடவே வந்து
பாட்டாளி வர்க்கமுனு அழிக்க பார்க்கும்
பயந்து நாங்க ஓட மாட்டோம்
நாடே உயர நாங்க உழைப்போம்

நீயும் நானும் ஒன்னா சேர்ந்து
நிம்மதிக்காய் சுதந்திரம் கண்டோம்
தனக்கு மட்டும் உரியதென்று
தம்பட்டமடிக்கும் சாதியடா நீ

உலக நாட்டு வரிசையிலே
ஒன்றாம் இடத்தில எங்க உழைப்பு
உழைப்பெல்லாம் சுரண்டிகிட்டு
ஊதாரியாக்குவதே உங்க நெனப்பு

இனியும் பொறும எங்களுக்கில்ல
துளியும் கூட அஞ்சுவதில்ல
கழனியில விளையும் நெல்லுபோல
கல்வியில உயர்ந்து காட்டுறோம் பாரு

எரிந்தது நூலகமா? இல்லை தாயகம்!


அன்பும் அறிவும் இரண்டறக் கலந்து/
அன்றையத் தமிழனின் மனதினில் பதிந்து/
உருவாகிய அழகிய அறிவுக் கோட்டை/
எருவாகிப் போனதால் வீழ்ந்ததே வேட்கை/


பனுவல்கள் நாளும் பற்பல சேமித்து/
பாசத்துடன் அனைவரையும் ஒன்றாய் கோர்த்து/
தமிழனின் வரலாற்றை தரணியில் நிலைநாட்ட/
தாற்பரியமாய் எழுந்த தங்க மாளிகையிது/

கண்கள் இரண்டும் குருடாகிப் போனால்/
காட்சிகளை காண முடியுமா எமக்கு/
அறிவுக்கண்னை தீயிட்டு அழிக்க நினைத்தால்/
ஞானக்கண் மீண்டெழுமே தெரியாத உனக்கு/

வீரத்தமிழனின் பான்மையை விளங்காத மானிடா/
தீரயோசித்து தீர்மானிக்காத கயவனடா நீ/
புத்தங்கங்களைத் தானெரித்து பித்தனே மகிழ்ந்தாயடா/
மொத்தமான தாயகத்தின் சித்தமெல்லாம் கலங்குதடா/

நாமெல்லாம் தாயகத்தில் ஒரு இனமடா/
நமக்கென்று ஒரு குணமுண்டு புரியாதா/
அரக்ககுணத்தை நீ எரித்துப் போட்டு/
அறிவுக் கண்ணை திறக்க விடு/

வாசகசாலையில் பிறந்த வண்ணச் சிசுக்களை/
வஞ்சக எண்ணத்தால் நசுக்கினாயே பாவி/
தழிழனின் தார்மீக சொத்துடா அது/
தரணியெங்கும் பறைசாற்றும் தமுக்கமடா இது/

நாம் வாழ்ந்த வரலாறுதான் நூலகம்/
நாசமாகிப் போனதே எங்கள் தாயகம்/
எதிர்காலம் நாளை தமிழின் வாசகம்/
இடிக்க முடியாத அழகிய கோபுரம்/

வருங்கால ஆட்சியினை வசமாக்குவான் தமிழனென்று/
ராத்திரி வேளையிலே ரணகளமாகியது தாயகமே/

இதயம் துடிக்காதோ

இதயம் துடிக்காதோ
என்னவளை நினைக்காதோ
நேசமென்றும் கசக்காதோ
நெஞ்சினிலே சுமக்காதோ
பக்தியும் பிறக்காதோ
முக்தியும் கிடைக்காதோ
காதலை மறுக்காதோ
காலகாலமாய் இனிக்காதோ

#தண்ணீரெனும் #தீர்த்தம்இயற்கை அன்னையின் உடையே
எமக்கு கிடைத்த கொடையே
மண்ணைக் காக்கும் மரமே
மழையை தந்த குணமே

ஊருக்கெல்லாம் உதவிடும் நீயே
ஓய்வில்லாது போராடும் நீரே
தனத்தை கொடுப்பது தர்மமே
தான்தோன்றியாய் வீணடிப்பது பாவமே
ஓடும் நீருக்கோ ஒற்றுமையுண்டு
ஒருநாள் கடலில் சேர்வதுமுண்டு
கிடைத்த பொக்கிசத்தை கிழிந்தெரிந்து
பீலி சண்டைகளோ நாளும் மூண்டு
காவல் பணிமனை முன்னே இன்று
கைக்கட்டி நிற்பது ஏனடா மனிதா
தண்ணீர் பஞ்சம் வரும்போது-நீயோ
தவமிருப்பாய் பீலிகரையில் நின்று
எப்போ தண்ணீர் வருமோவென்று
ஏக்கத்துடன் கலங்குவாய் நின்று
வெறுமனே குழாய்களை திறந்து சென்று
வெட்டிக் கதைகள் பேசினாய் அன்று
சிந்திய துளிகளையெல்லாம் தினமளந்து
திருப்பி தருவாயா நீயே இன்று
கடவுளுக்கே வந்த கோபமென்ன
கலங்க வைத்த சாபமென்ன
இத்தனைக்கும் இனிய பதில்
இறைவன் நம்மை சபித்ததாலே