உனக்காகப் பூத்திருக்கின்றேன்..



மொட்டில் உறங்கும் தேன் துளியாய்
முகமனுக்கு காத்திருக்கும் விருந்தோம்பலாய்
மார்கழி குளிரின் மன்மத ராகமாய்
மாமனே உன்னை மனதில் பதித்தேனே

கல்யாண வீட்டில் காத்திருக்கும் பாலும்
முதலிடம் பிடிக்கும் முக்கனி ஒன்றும்
எதிர்கால வாழ்வின் தத்துவ நிலையை
இரட்டை அர்த்தமாய் இயம்புதே இங்கே

பிஞ்சிலே மலர்ந்த வஞ்சியாய் நானும்
பேதமை அறியா நெஞ்சிலே நீயும்
தங்கமாய் உதித்த காதல் சுடரே
கட்டிளம் பாடும் கானம் கேட்கலையோ

பூவை மொய்க்கும் வண்டினமாய்
தேனைக் குடிக்கும் காவலனாய்
உன்னை நாடும் காரிகையை
திண்ணை தேடி வருவதெப்போ

காலங்களும் ஓடி மறையும்
கண்ணுக்குள்ளே காதல் உறையும்
வாடிப்போகும் முன்னே வந்து
வசந்த காற்றை நுகர்ந்து விடு

எண்ணில்லா வாசனையை
ஈர்க்கும் மலரோ நானல்ல
அனிச்சை மலராய் காத்திருக்கேன்
துணிச்சலாய் நீயும் தூக்கிச்செல்லு


0 comments:

Post a Comment