தலைப்பு:வணங்குகிறேன் தாயே


பாசத்தையும் பாலையும் ஒன்றாய் கலந்து
பத்துத் திங்களாய் தவமும் கிடந்து
உதிரத்தின் ஊடே உடலைத் தந்தவளே
உத்தமியே பத்தினியே உன்னை வணங்குகிறேன்


வறுமையை தினம் பொறுமையாய் கற்றுணர்த்தி
சிந்தையில் செதுக்கிய சிலையாய் ஆற்றுப்படுத்தி
பண்பாய் பட்டைத் தீட்டிய பார்வதிக்கு
இதயச் சேயாய் இருகரம் கூப்புகின்றேன்

சுவாசம் எனும் சுந்தரக் காற்றை
சுக்கில வடிவில் கருவில் ஏற்றி
ஒளித் தந்த உயிருள்ள தெய்வமே
ஒவ்வொரு நொடியும் உன்னைப் பணிகின்றேன்

மண்தரையில் மலரும் தங்கம் போலே
கருவறையில் உலகைக் காட்டியத் தாயே
அட்சயபாத்திரமே நீதான் அழகுச் சிலையே
ஆயுள்வரை உன்னை வணங்குகிறேன் அம்மா

1 comments:

கனகராஜா கனகராஜா said...

நிலாமுற்றம் நடாத்திய 4ம் ஆண்டு விழா போட்டிக்காக எழுதப்பட்ட கவியிது
நிலவின் சுடரொளி எனும் விருதையும் வசீகரித்துக்கொண்டது.

Post a Comment