உன் நினைப்பில் பூ தொடுத்தேன்



உன் நினைப்பில் பூ தொடுத்தேன்

உயிரையே அதில் ஈடு வைத்தேன்
அழகு மலர்களை கையில் எடுத்து
அன்புத் தேனை நாளும் குடித்து
காதலிக்க நினைத்தபோது
கண்ணொளியில் சிக்கியதே

வாசம் வீசும் வண்ண மலர்கள்
நேசம் கொண்ட நீண்டச்சரமாய்
பாசமெனும் உன் நினைப்பை
பக்கத்திலே வந்து சுமந்ததடி

நினைவுகளோ தொடர் கதையாய்
நீண்ட கதை சொல்கிறதே
கண்ட நாளை மறக்கவில்லை
காவியமும் படைக்கவில்லை
உள்ளம் என்ற சுவடினிலே
உன்நாமம் ஒலிக்கிறதே

ஒன்றாய் கூடிய மலர்களெல்லாம்
உன் மனசை உடனே கவர்ந்திடவே
அத்தான் நினைப்பில் பூத்தொடுத்த
ஆயுள் வரை உன்னை மறவேனடி

அவள் என் அகராதி



அகர வரிசையின் முதலெழுத்து

அன்புச்சரம் நீதானே

காதல் எனும் கடலினிலே
கலைச்சொல்லும் நீதானே
ஓராயிரம் வார்த்தைகுள்ளே
உன்னையே தேர்ந்தெடுத்தேன்
பல அர்த்தம் புகுட்ட வைத்த
பத்தினியும் நீதானே
இலக்கணத்தில் எழுத்துப்பிழை
எத்தனையோ
கண்டதுண்டு
என்னவளின் புத்தகத்திலே
அத்தனையும் நிறைகுடமாயுண்டு
அவயங்கள் ஒவ்வொன்றும்
அர்த்தம் ஒலிக்கும் மங்களமாய்
மொத்தமாய் வந்துதித்த
முதல் அகராதி நீதானே

முயற்சியே திருவினையாகிறது



வறுமை குடும்பத்தில்
பிறந்தவனே
வாழ்வில்
வாகை சூடுகிறான்
உடலை வளர்க்க
உணவை சுருக்கி
உபவாசம் செய்பனும்
ஒல்லியாகிறான்

இன்று இளமை உணவு
உண்ணும் தனவந்தன் எல்லாம்
அன்று ஒரு பிடி சோற்றுக்கு
தவமிருந்தவர்கள்தான்
முயற்சி எனும் தாரக மந்திரத்தை
முழு நேரமும் ஓதியவர்கள்தான்
உலக சாதனையில்
கீர்த்தி பெற்றோரெல்லாம்
விடாமுயற்சியின் விதைகள்தான்

வாழ்க்கைத்துணையின்
நெறியாள்கையோடு நீந்தியவரெல்லாம்
கலங்கரைவிளக்கங்களாய்
கரையை கண்டவர்கள்தான்
முயற்சி என்ற பயிற்சியை
மூவேளையும் தான் ஜெபித்து
முக்தி பெற்ற புரோகிதர் தான்

கவிஞனென்ற அடையாளத்தை
பெற காத்திருந்த நாணலே நான்
பாவலர்களின் கணிப்பிலே
பட்டைத் தீட்டப்பட்டவனும் யானே

தோல்விகள் பல கண்டு
துவன்று விடவில்லையே
வெற்றி கனி சுவைத்திடவே
முயற்சி மரம் ஏறிவந்தேன்

இயற்கை என்னும் இளைய கன்னி


இயற்கை என்னும் இளைய கன்னி
மசக்கையினால் மாம்பழம் கிள்ளி
எழில் கொஞ்சும் இத்தரணியிலே
நிடலம் வளைத்த வானவில்லோ
விசும்புதனை கட்டியணைத்து
குசும்பு செய்யும் கோமகளோ

நட்சத்திரம் வானில் மின்ன
நடுநிசியில் ஊருறங்க
நிசப்த வேளையில்
காதல்உலாவும்
நிலாமகள் நீதானே
அழகு மகள் தேர்போல
அரவணைக்கும் தாய்ப்போல
திங்களெனும் பெயரில் வந்த
தங்கப்பாவை நீதானே
காற்றை நீயோ காதலித்து
ஆரணிய தேவதைகளை
கட்டிப்பிடித்து சல்லாபிக்கும்
தென்றலும் நீதானே
பயணம் பல செல்லும் போது
பாவை உன்னை நான் மறவேன்
அம்மா என்ற உயிரைக்கூட
சும்மா தந்தவள் நீதானே
செயற்கை என்னும் நவீன மங்கை
இயற்கையின்றி வாழ்ந்திடுமோ

அக்கா


இன்னொரு அம்மா என்னக்கா
இன்ப துன்பத்தை பகிர்ந்து
என் இதயத்திற்குள் புகுந்து
இன்னிசை பாடும் தேவதை
என்னக்கா

குழப்படி செய்தால்
வழக்கப்படி வந்து
தடியடி கொடுத்து தடயம்
பதித்தவள் என்னக்கா
வறுமை வந்து வாட்டியபோது
பொறுமையாய் பசி தீர்க்க
தானுன்பதை விடுத்து
தம்பிக்கு கொடுங்கம்மாளென
தாட்சணியம் காட்டியவள்
என்னக்கா
வாழ்வில் திருமணம் எனும்
நறுமணம் வீச
தினமும் சிந்தனை
இளையவன் பக்கம் திரும்ப
இசைவாக்கமாய்
இயங்கியவளே என்னக்கா
ஆதரவு அன்பும் அவளது
இரு கரங்கள்
அரவணைப்புக்கு இவளே ஆதாரம்
தம்பி தம்பி என உச்சரிப்பதே
தாயவளின் தாரகமந்திரம்
ஆசைக்கொன்று அஸ்திக்கொன்று
அக்காளே அன்புப் பூக்கன்று
அடிக்கடி விடும் மூச்சுகாற்று
அவளது சுவாசக்காற்று
பல்லாண்டு நீ வாழ்க தாயே
பாசத்துடன் வாழ்த்துவது
உன் அன்பு சேயே

துன்பத்தில் தோள் கொடுப்பது மனைவி



பார்க்காமல் வந்த பார்வதியே
பாவங்களை நீக்கும் புண்ணியநதியே
உண்மையின் அடையாளமான உத்தமியே
ஊரே போற்றும் சித்திரமே
பிணியென்று எனக்கு வந்துவிட்டால்
பிசினைப் போல ஒட்டிக் கொள்வாளே
அருகினிலே தானிருந்து நித்தம்
ஔடதமாய் கலந்து ஆதரிப்பவளே
கண்ட நாள் முதல் கொண்டு
கண்ணிமைக்குள் வைத்து காப்பவளே
துன்பம் என்ற வாசகத்தை
தூக்கி தொலைவில் வீசியவளே
நல்குரவு என்ற நாற்றுதனை
நாட்ட நாட்டம் நாடாதவளே
அன்பு எனும் அகல்விளக்கேற்றி
அடியோடு இருட்டை நீக்கியவளே
வாழ்க்கை எனும் போருக்குள்ளே
வாகைச் சூட வந்தவளே
மனசு என்ற மாளிகைக்குள்
மங்காமல் வைத்து காப்பாளே