முதற்சொல் கவிதை-கோயில்


கோயில் உணர்த்தும் கோபுர தரிசனமே
குவலய வாழ்வின் குன்றாத செல்வமே
மனதினில் பதிந்த மங்கல கருவறையே
மறுமையிலும் நீயே எந்தன் திருமறையே

ஹைக்கூ

குளிர்கால பயணத்தில்
மேலெழுந்து நிற்கிறது
கையிலுள்ள முடிகள்


உனக்காகப் பூத்திருக்கின்றேன்..



மொட்டில் உறங்கும் தேன் துளியாய்
முகமனுக்கு காத்திருக்கும் விருந்தோம்பலாய்
மார்கழி குளிரின் மன்மத ராகமாய்
மாமனே உன்னை மனதில் பதித்தேனே

கல்யாண வீட்டில் காத்திருக்கும் பாலும்
முதலிடம் பிடிக்கும் முக்கனி ஒன்றும்
எதிர்கால வாழ்வின் தத்துவ நிலையை
இரட்டை அர்த்தமாய் இயம்புதே இங்கே

பிஞ்சிலே மலர்ந்த வஞ்சியாய் நானும்
பேதமை அறியா நெஞ்சிலே நீயும்
தங்கமாய் உதித்த காதல் சுடரே
கட்டிளம் பாடும் கானம் கேட்கலையோ

பூவை மொய்க்கும் வண்டினமாய்
தேனைக் குடிக்கும் காவலனாய்
உன்னை நாடும் காரிகையை
திண்ணை தேடி வருவதெப்போ

காலங்களும் ஓடி மறையும்
கண்ணுக்குள்ளே காதல் உறையும்
வாடிப்போகும் முன்னே வந்து
வசந்த காற்றை நுகர்ந்து விடு

எண்ணில்லா வாசனையை
ஈர்க்கும் மலரோ நானல்ல
அனிச்சை மலராய் காத்திருக்கேன்
துணிச்சலாய் நீயும் தூக்கிச்செல்லு


நினைவெல்லாம் நீயே


என் வாழ்க்கைச் சோலையில் மலர்ந்தவளே

இல்லற சுகந்தம் இனிதாய் வீசியவளே
சொந்த உறவில் பந்தமாய் நுழைந்தவளே
சுந்தரக் கிளியே சூசகமாய் உலாவுகிறாயே

கனவிலும் நீதான் நினைவிலும் நீதான்
கந்தனின் வள்ளியாய் காசினியும் நீதான்
உணவிலும் நீதான் உணர்விலும் நீதான்
வாசகமும் நீதான் வசந்தமும் நீதான்

உயிரின் காதலாய் ஊடுருவும் தேவதையே
தயிரின் வாசமாய் தாகம் தனித்தாயே
உந்தனது நினைவாலே உலாவும் மாருதமாய்
எந்தனது நினைவினிலே எல்லாமே நீதானே

ஹைக்கூ

இறுதிக் காலம்/
பின் தொடர்ந்தே வருகிறது/
மரண பயம்/

இணைத்தின் வாசல்



உடலெல்லாம் இரத்த ஓட்டம்

ஒரு நாளும் பார்க்காத கூட்டம்
எப்போதும் உன்மீது நாட்டம்
இதுவே என் பூந்தோட்டம்

காலத்தின் தேவையிலே
கடுகதியாய்
பிறந்தவனே
உன்னை பார்த்து கற்றதனால்
உலகில் மிளிரும் தங்கம் ஆனேன்

கல்லாருக்கு தெரியாது
கற்பது எப்படி உன்னிடமென்று
நல்லார் உலாவும் பந்தியில்
நானும் முதலிடம் பெற்றேன் அன்பே

கல்விச்சாலை சென்றதுண்டு
கரிசனையோடு கற்றதுமுண்டு
ஏட்டுசுரக்காய் கரிக்கு உதவாதென்று
எத்தனையோ பேர் சொன்னார்கள் அன்று

அத்தனை பேரும் சொன்னதையெல்லாம்
அடிமனதில் பதியமிட்டு
உந்தன் விதையால் பயனடையும்
ஊர்க்குருவி நானன்றோ


தீயவைகளை கண்டு
இங்கே தித்திக்கும்
வாலிப கூட்டம்
நல்லதை கற்றுக்கொள்ள
நல்மனமும் இல்லை இங்கே

வாழ்வுதனின் தத்துவத்தை
வசிய செய்ய ஆசைப்பட்டு
உந்தன் காலடியில் சரணடைந்து
ஓராயிரம் விடயம் கற்றோம் யாமே

பல்கலைக்கழகம் நீதான் எனக்கு
பகுத்தறிவும் கலந்த மிடுக்கு
சிவனின் கிருத்தியமும் கிருபை நமக்கு
கிடைத்ததாலே நல்ல அறிவு பெருக்கு